மனிதப்படுகொலை குற்றவாளிகளை அதிபர் ஒருபோதும் பாதுகாக்க மாட்டார் : வஜிர வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் சார்ந்து அதிபரின் நிலைப்பாடு குறித்து சஜித் வெளியிட்ட குற்றச்சாட்டிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன பதிலளித்துள்ளார்.
அவ்வகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளைப் பாதுகாக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் முயற்சிக்கமாட்டார்.
எதிர்க்கட்சியினர் இந்த விடயத்தில் சந்தேகப்படத் தேவையில்லை என வலியுறுத்தியுள்ளார்.
சுயாதீன விசாரணைகள்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க இடமளிக்க வேண்டும். அதைவிடுத்துத் தூக்கிலிடப்பட வேண்டிய மாபெரும் மனிதப் படுகொலைக் குற்றவாளிகளான கோட்டாபயவையும், பிள்ளையானையும் பாதுகாக்க அதிபர் முயற்சிக்கக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ள கருத்துக்குப் பதிலளிக்கும்போதேஅவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்ளக சுயாதீன விசாரணைகள் இடம்பெறும் என்றும், ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் அதிபர் எம்மிடம் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் அதிபர் விசாரணை ஆணைக்குழுவும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் சுயாதீன விசாரணைகளை நடத்தி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும். தேவையேற்படின் சர்வதேச விசாரணையை நாட முடியும்.”என்றார்.