தேசபந்து தென்னகோனின் பதில் காவல்துறை மா அதிபர் நியமனத்திற்கு எதிராக மனு தாக்கல்
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூவர், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன், பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படுவதைத் தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
மனுதாரர்கள் ஏ.எம்.ஏ. நிஷாந்த, பி.எம்.ஆர். பெர்னாண்டோ மற்றும் ஜே.ஏ.டி.எப். பிரியந்த ஆகிய மூவரே குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
சட்டமா அதிபர், அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் மற்றும் பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரியால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழு இலங்கை காவல்துறையில் பணியாற்றும் ஏராளமான அரச அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் கடுமையான அலட்சியம் மற்றும் குறைபாடுகளை கண்டறிந்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அந்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்றிடம் கோரிக்கை
இந்தநிலையில் தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபராக நியமிப்பது தொடர்பில் அரசியலமைப்பின் 41ஆவது சரத்தின் பிரகாரம், அரசியலமைப்பு பேரவை அதிபருக்கு அங்கீகாரம் வழங்குவதைத் தடுக்கும் உத்தரவை மனுதாரர்கள் நீதிமன்றிடம் கோரியுள்ளனர்.
சட்டத்தரணி துஷாரி ஜயவர்தன ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |