ஈஸ்டர் தாக்குதல் பேரவலத்திற்கான நீதி: அறைகூவல் விடுக்கும் முஸ்லிம் அமைப்புகள்!!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் வெறும் பயங்கரவாதச் செயல்கள் மட்டுமல்ல, இஸ்லாத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதையும், முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதையும், ஓரங்கட்டுவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு பரந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்று முஸ்லிம் அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் 6 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று (20) முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றச்சாட்டு அல்லது தண்டனை இல்லாமல் முஸ்லிம் தனிநபர்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அவர்கள் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
நம்பகமான முடிவு
எனவே, தற்போதைய அரசாங்கம் அனைத்து விசாரணைகளையும் மேலும் தாமதிக்காமல் வெளிப்படையான மற்றும் நம்பகமான முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், அனைத்து சமூகங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் இஸ்லாத்தையோ அல்லது முஸ்லிம் சமூகத்தையோ பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை எனவும் அவர்களின் செயல்கள் தமது நம்பிக்கையின் கொள்கைகளையும், நாம் நிலைநிறுத்தும் மதிப்புகளையும் முழுமையாக மீறுவதாகும் என்றும் குறித்த முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தமிழ் மக்கள் உட்பட அனைவருக்கும் நீதி
அத்தோடு, தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்றும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்படாமலும், தாக்குதல்களைச் சுற்றியுள்ள அடிப்படைக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமலும் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்படி, ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, நீண்ட உள்நாட்டுப் போரின் போது தமிழ் பொதுமக்கள், 1971 மற்றும் 1989 கிளர்ச்சிகளின் போது சிங்கள இளைஞர்கள் மற்றும் அளுத்கம தாக்குதல்கள், ஜின்தோட்ட தாக்குதல்கள், திகன தாக்குதல்கள், மினுவாங்கொட தாக்குதல்கள் மற்றும் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் கட்டாய தகனம் போன்ற சம்பவங்களில் பாகுபாடு மற்றும் வன்முறையைச் சந்தித்த முஸ்லிம் சமூகங்கள் உட்பட அநீதிக்கு ஆளான அனைத்து சமூகங்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
