சர்வதேச விசாரணைக்கு சாட்சியமளிக்க தயார்: அசாத் மௌலானா அதிரடி
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சாட்சியங்களை சர்வதேச விசாரணையில் ஒப்படைக்க தாம் தயார் என அசாத் மௌலானா அறிவித்துள்ளார்.
ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்ட மௌலானா, சுயாதீன விசாரணை ஒன்றின் முன்னால், தான் சாட்சியமளிக்க தயார் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானியாவின் சனல் 4 மூலம் செப்டம்பர் 5 ஆம் திகதி ஒளிபரப்பப்பட்ட "இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள்" என்ற ஆவணப்படம் இலங்கையில் கணிசமான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சுயாதீன விசாரணை
அத்துடன் இந்த ஆவணப்படம் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு ஆதரவை உருவாக்கியுள்ளது. எனினும் நிறைய வதந்திகள் மற்றும் போலி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
அத்துடன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கூட அவதூறு செய்து சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. தாம் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் பணியாற்றிய போது, தாம் ஆயுத பயிற்சி பெற்ற போராளி அல்ல.
இதன் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் தொடர்பான முக்கியமான மற்றும் இரகசியத் தகவல்கள் தனக்குக் கிடைத்தன” என்றும் அவர் கூறியுள்ளார்.