உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை நிறுத்தப்படக்கூடாது : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்தப்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
இன்று (8) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சுரேஷ் சலே தம்மீது அவதூறு வழக்கை தொடர்ந்துள்ள நிலையில், அதனை இல்லாது செய்வதற்காகவே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக சிலர் போலியான வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றார்கள். அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய தேவை உள்ளது.
சுரேஷ் சலே கைது
நான் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பில், அவர் எனக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருப்பது உண்மையாகும். அந்த வழக்கை இருதரப்பின் இணக்கப்பாடுகளுக்கு அமைய முடிவுக்கு கொண்டு வர முடியும் என சலே என்னிடம் கோரியிருந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் எனது சட்டத்தரணிகள் குழாமினரும் அருகில் இருந்தனர். ஆனால் அவ்வாறான தேவை ஒன்று இருக்கவில்லை. நான் வெளியிட்ட கருத்துக்கள் சரியானவை என நம்புகின்றேன். அதனால் இந்த வழக்கை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வோம் எனக் கூறியிருந்தேன்.
எவ்வாறாயினும் அவர் தற்போது கைது செய்யப்பட்டமையானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அடிப்படையிலேயாகும். அந்த விசாரணைகள் அனைத்தும் தடையின்றி நடைபெற வேண்டும்.
குறித்த தாக்குதலின் பின்னணியில் ஒரு அரசியல் சூழ்ச்சி உள்ளதா என்பதை அறிந்து கொள்ள பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிமை உண்டு. எனவே அந்த விசாரணைகள் எந்தவொரு அழுத்தங்களாலும் இடைநிறுத்தப்படக்கூடாது“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 16 மணி நேரம் முன்