உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதியை அம்பலப்படுத்தப்போகும் முக்கிய நபர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அசாத் மௌலானா(Asad Maulana) சதியை வெளிப்படுத்த முடியும் என்று கத்தோலிக்க திருச்சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன் 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலின் ஆறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னர், கத்தோலிக்க திருச்சபை நடந்து வரும் விசாரணைகளின் நிலை குறித்து திருப்தி தெரிவித்துள்ளது.
நேற்று (19) கொழும்பு ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த கொழும்பு மறைமாவட்ட தொடர்பு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்தா(Director Rev. Father Jude Krishantha), தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் அவ்வப்போது திருச்சபைக்கு தகவல்களைத் தெரிவித்து வருவதாகக் கூறினார்.
விசாரணைகளில் திருப்தி அடைகிறோம்
"விசாரணைகளில் நாங்கள் திருப்தி அடைகிறோம். விசாரணைகள் எவ்வாறு முன்னேறி வருகின்றன என்பது குறித்து அவர்கள் அவ்வப்போது எங்களுக்குத் தெரிவித்தனர்," என்று அவர் குறிப்பிட்டார்.
இழப்பீடு கோரி மனு செய்த பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகள் உட்பட பல வழக்குகள் இன்னும் நடந்து வருவதாகவும், தற்போது சுமார் 20-25 சந்தேக நபர்கள் காவலில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
"காவலில் உள்ளவர்களில் சிலர் தாக்குதல் குறித்து நிறைய தகவல்களைக் கொண்ட நபர்கள்."
அசாத் மௌலானா ஒரு முக்கிய நபராக இருக்க முடியும்
தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிப்பதில் அசாத் மௌலானா ஒரு முக்கிய நபராக இருக்க முடியும் என்று அவர்கள் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
சனல் 4 ஆவணப்படத்திற்காக தாக்குதல் குறித்து சாட்சியமளித்த சாட்சியான மௌலானா, புலனாய்வு சேவைக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாகவும், இந்த அமைப்புகள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
“சனல் 4 ஆவணப்படத்தில் தகவல்களை வழங்கிய அசாத் மௌலானாவை விசாரிப்பதன் மூலம் நிறைய விஷயங்களை வெளிப்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அருட்தந்தை கிருஷாந்தா கூறினார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளின் முன்னேற்றம் குறித்து கேட்டபோது, வழக்குகளை காவல்துறையினர் கையாண்டு வருவதாக சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க குறித்த ஊடகத்திடம் தெரிவித்தார்.
“நாங்கள் இதில் ஈடுபடவில்லை. நீங்கள் காவல்துறையினரிடம் பேச வேண்டும்,” என்று அவர் கூறினார்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர்
இது தொடர்பாக பேசிய காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்எஸ்பி புத்திக மனதுங்க, தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரும் விளக்கமறியல் சிறையில் அல்லது நிபந்தனை பிணையில் வெளியே உள்ளனர் என்று தெரிவித்தார்.
தற்போது எந்த சந்தேக நபரும் காவல்துறை காவலில் இல்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், விசாரணைகள் முன்னேறி வருவதாகக் கூறினார். “விசாரணைகள் நன்றாக நடந்து வருகின்றன. அவை முன்னேற்றம் அடைந்து வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கத்தோலிக்க சமூகம், இலங்கையர்களுடன் சேர்ந்து, காத்திருப்பதாக அருட்தந்தை கிருஷாந்த மேலும் கூறினார். தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளிப்படுத்தல்களை வெளியிட்டு விசாரணைகளை முன்னோக்கி எடுத்துச் செல்வார் என்று அவர்கள் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலும், கட்டுவாபிட்டி புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் நாளை (21) தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this
