ஐந்தரை வருட கால அரசாங்கங்களின் சூழ்ச்சி: ஜனாதிபதி அநுர பகிரங்கம்
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய துயரம் 2019 உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு இன்று (20) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஐந்தரை ஆண்டுகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் உள்ள நோக்கம் உண்மையான சூத்திரதாரிகளை மறைப்பதே என்றும் ஜனாதிபதி அநுர அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையான குற்றவாளிகள்
அத்துடன், 2019 இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கமும், அதைத் தொடர்ந்து வந்த அரசாங்கமும், உண்மையான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள், தற்போதைய தேசிய மக்கள் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதி செய்வதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழு அறிக்கை
இவ்வாறானதொரு பின்னணியில், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை, மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) இன்று (20) உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளரால் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
