மக்களின் வரிப்பணத்தில் சவாரி செய்யும் ரணில் : எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
நாட்டில் நிலவும் நெருக்கடி இயற்கையாக உருவானதொன்றல்ல, திறமையற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட நெருக்கடி என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாரம்மல நகரில் நேற்று(21) மாலை இடம்பெற்ற ஜன பௌர நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி
"இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள், நாட்டை வங்குரோத்தாக்கி விட்டு உலகம் சுற்றி வருகின்றனர், இவ்வாறு மக்கள் படும் துன்பங்களை உணர்வாறின்றி செயற்படும் ஆட்சிப் போக்குக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.
மக்களை பலிகடாவாக்கி மக்கள் படும் துன்பங்களையும்,வலிகளையும் கருத்தில் கொள்ளாமல்,மக்கள் படும் இன்னல்களை எண்ணாமல் மக்களின் வரிப்பணத்தில் நாட்டின் தலைவர் சவாரி செய்து வருகிறார்.
நாட்டின் அதிபராக 17 மாதங்களில் 18 வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளார், வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகை போதாமையினால் மேலும் 200 மில்லியன் ஒதுக்கிக் கொண்டுள்ளார்." என்றார்.
நட்பு வட்டார முதலாளித்துவம்
அதிபர் விக்ரமசிங்க - ராஜபக்ச நட்பு வட்டார முதலாளித்துவத்தை கடைப்பிடித்து வருகிறார், மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிப்பணம் ஊழல் மற்றும் மோசடி மூலம் திருடப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டை சிங்கப்பூர் ஆக மாற்றுவேன் என்றும் தொங்கு பாலத்தால் சென்று நாட்டை கட்டியெழுப்புவேன் என அதிபர் கூறினாலும்,வரிசையில் நின்று இறந்தவர்கள், தரக்குறைவான மருத்துவத்தால் உயிர் இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு கூட இன்னும் நீதி கிடைக்கவில்லை.
இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் நாடு வங்குரோத்து நிலையில் அடுத்து மீள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் முட்டாள் தனமான கொள்கைகளால் நாட்டை அழித்து வருகிறது, நட்பு வட்டார முதலாளித்துவத்தை பின்பற்றும் இந்த அரசாங்கம் மாற்றப்படவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |