இலங்கையில் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி..! ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை
நெருக்கடி
இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள குழந்தைகள் 'பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள்' என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது.
ஏனைய தெற்காசிய நாடுகளும் இதேபோன்ற பற்றாக்குறையை எதிர்நோக்கக்கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
உணவு, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வற்கு வெளிநாட்டு நாணயம் இல்லாமல் போனதை அடுத்து, இலங்கை வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
வழக்கமான உணவைத் தவிர்க்கும் குடும்பங்கள்
இந்தநிலையில் வழக்கமான உணவைத் தவிர்க்கும் குடும்பங்களால் இந்த நெருக்கடி கடுமையாக உணரப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பின் (யுனிசெஃப்) தெற்காசிய இயக்குனர் ஜோர்ஜ் லாரியா-அட்ஜெய் கூறியுள்ளார்.
சிறுவர்கள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள், அவர்களுக்கு அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று அவர்களுக்கே தெரியவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கை தனது 51 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை, இதனையடுத்து தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பிணை எடுப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து எரிசக்தி விலை உயர்ந்து வருவது அண்டை நாடுகளின் பொருளாதாரங்களையும் தாக்கியுள்ளது.
மேலும் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் தங்கள் சொந்த ஊட்டச்சத்து நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடும் என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரி கூறினார்.
தெற்காசியா முழுவதும் பொருளாதார நெருக்கடி
தெற்காசியா முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் சிறுவர்களின் உயிருக்கு மேலும் அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை தெற்காசியாவின் மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை யுனிசெஃப் இலங்கையின் சிறுவர் சனத்தொகையில் குறைந்தது பாதியளவானவர்களுக்கு அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 25 மில்லியன் டொலர்களுக்கான வேண்டுகோளை விடுத்துள்ளது.
அத்துடன் சிறுவர்களிடையே வேகமாகப் பரவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சமாளிக்க இலங்கை அரசாங்கமும் இந்த மாதம் சர்வதேசத்திடம் வேண்டுகோளை வெளியிட்டது.
இதற்கிடையில் 2021 ஆம் ஆண்டின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, நாடு
முழுவதும் உள்ள 570,000 முன்பள்ளி மாணவர்களில் 127,000 பேர் ஊட்டச்சத்து
குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.