இலங்கையின் பொருளாதாரம் முச்சக்கர வண்டி போல் - ரணில் வெளியிட்ட தகவல்
இலங்கையை பொருளாதார வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் என வலியுறுத்திய அதிபர் ரணில் விக்ரமசிங்க, கடனை மீளச் செலுத்தக்கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவேன் என்றும் தெரிவித்தார்.
இலங்கை - ஜப்பான் உறவுகளின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு டொயோட்டா லங்கா நிறுவனத்தினால் கடவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட வாகன உதிரிப் பாகங்கள் விநியோக நிலையத்தை இன்று அதிபர் திறந்து வைத்தார்.
முதலீட்டு வாய்ப்பு
இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், யுத்தத்தின் பின்னரான பொருளாதார வேலைத்திட்டத்தில் மாற்றம் ஏற்படாமையால் இன்று நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
அடுத்த வருடத்திற்குள் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்து பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாக அதிபர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடியதும் முதலீட்டு வாய்ப்புகளை கொண்டு வரக்கூடியதுமான நிறுவனக் கட்டமைப்பு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்திய அதிபர், இலங்கை முதலீட்டு சபையின் முதலீட்டு ஊக்குவிப்புப் பிரிவை, ஏற்றுமதி மேம்பாட்டு சபையுடன் இணைத்து பொருளாதார கூட்டுத்தாபனமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம் முச்சக்கர வண்டி போல்
வியட்நாமின் பொருளாதாரம் பந்தயக் கார் போல் உள்ளதாகவும் இலங்கையின் பொருளாதாரம் முச்சக்கர வண்டி போல் உள்ளதாகவும் கூறினார்.
நாட்டில் திறந்த பொருளாதாரத்தை உருவாக்கி, போட்டித்தன்மையுடன் பயணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.