பாடப்புத்தக விவகாரம்... கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் : நாமல் கோரிக்கை
தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் காணப்பட்ட தவறுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த புத்தகத்தில் உள்ள தவறுகளுக்காக அமைச்சின் அதிகாரி ஒருவர் பதவி விலகுவதை விட, கல்வி அமைச்சராக இருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவே (Harini Amarasuriya) பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் பதவி விலகியுள்ளமையைச் சுட்டிக்காட்டிய அவர், அந்தக் குழுவின் தலைவரை நியமித்தவர் பிரதமர் என்பதால், அதற்கு அவரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என குறிப்பிட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு
அத்துடன் பாடப்புத்தக விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதை நாமல் ராஜபக்ச கேலி செய்துள்ளார்.

மேலும், அமைச்சிற்கு வெளியே உள்ள ஒருவரால் இந்தப் புத்தகத்தை அச்சிட முடியாது என்றும், அமைச்சிற்குள்ளேயே தான் இது அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறி முறைப்பாடு செய்வது வேடிக்கையானது என சுட்டிக்காட்டினார்.
அமைச்சின் செயலாளரை யாரும் ஏமாற்ற முடியாது என்றும், ஒரு தனிநபர் ஒரு பாடப்பரப்பு தொடர்பாக தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாது என்றும் நாமல் ராஜபக்ச இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |