கல்விச் சீர்திருத்த முறைகேடு : இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
இலங்கையில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் அதற்கான பாடத் தொகுதிகள் தயாரிப்பில் இடம்பெற்ற நிதி விரயம் தொடர்பாக, கையூட்டல் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தக் கட்சியின் உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன கவிரத்ன (Rohini Kumari Wijeratne-Kavirathna), இந்தச் சீர்திருத்தச் செயல்முறை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக நடந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாடப்புத்தகங்கள் அச்சிடுதல், விநியோகம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக செலவிடப்பட்ட கோடிக்கணக்கான வரிப்பணம் தற்போது வீணாகியுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
கல்விச் சீர்திருத்தங்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஆசிரியர்கள், கல்வியியலாளர்கள், பெற்றோர் அல்லது நாடாளுமன்றத்துடன் எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை.

பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருந்தும், தம்மை இந்தச் செயற்பாட்டில் இணைத்துக்கொள்ளவில்லை.
சீர்திருத்தங்களைத் தயாரிக்கும் தேசிய கல்வி நிறுவனத்தின் முக்கிய பதவிகளில் இருப்பவர்களின் தகைமைகள் குறித்து ரோஹினி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். பொருத்தமற்ற நபர்கள் இப்பதவிகளில் இருப்பதால் தரம் பாதிக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
இலங்கை ஆசிரியர் சங்கம்
இதேவேளை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில், இந்தச் சீர்திருத்தங்களுக்காக இதுவரை சுமார் ஒரு பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

பாடத் தொகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளதால், தற்போது அச்சிடப்பட்டவை பயனற்றவையாகிவிட்டன. இந்த இழப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே மீளப் பெற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடத் தொகுதியில் இடம்பெற்ற ஒரு பொருத்தமற்ற இணையத்தளக் குறிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ஆறாம் வகுப்பு கல்விச் சீர்திருத்தங்கள் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |