இது ரகசியமல்ல! வெளிப்படையாக ஒத்துக்கொண்டார் கோட்டாபய
எமது நாட்டின் கல்வி முறைமையானது, இன்றைய உலகின் தேவைகளுக்கு ஏற்றதாக இல்லை என்பது ரகசியமல்ல என்கிறார் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa).
இன்று ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பல தசாப்தங்களாக இலங்கையின் கல்வி முறைமையைப் பின்னுக்குத் தள்ளும் இந்த அணுகுமுறை தனக்குப் புரியவில்லை எனவும் கூறினார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“பொதுவாக, இலங்கையில் வழங்கப்படும் கல்விக்கும் 21ஆம் நூற்றாண்டில் நமது நாடு வளர்ச்சியடையத் தேவையானவற்றுக்கும் இடையே பொருந்தாத தன்மை உள்ளது.
இதனால் தான் கல்விச் சீர்திருத்தங்கள், குறிப்பாக எமது மூன்றாம் நிலைக் கல்வி முறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறேன்.
பல்கலைக்கழக மாணவர்கள் எந்தப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தாலும், அவர்கள் அனைவரும் குறைந்தது தகவல் தொழில்நுட்பத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
குறைந்தபட்சம், கணிணிகளின் மூலம் பணிபுரிவதற்கான சில அனுபவங்களைப் பெறும் வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும்.
விமர்சன சிந்தனை, தொழில்முனைவு மற்றும் ஆங்கில மொழித்திறன் உள்ளிட்ட இன்றைய உலகின் வெற்றிக்குத் தேவையான மற்ற திறன்களையும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
இவற்றில் பல சீர்திருத்தங்கள் ஏற்கெனவே எமது பல்கலைக்கழகங்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அடுத்த ஆண்டு இன்னும் பல மறுசீரமைப்புகளை அறிமுகப்படுத்த உள்ளதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.