இந்திய சீன பலப்பரீட்சையில் அழிவது ஈழத்தமிழினமே! ஆக்கிரமிப்பு நகர்வால் சிக்கல்
பாக்கு நீரிணையில் இந்திய - சீன பலப்பரீட்சை களமாக மாறுமாயின் முதலில் அழிவது ஈழத்தமிழர்கள் தான். அதனை ஒருபோதும் கைகட்டி வேடிக்கை பார்க்க போவதில்லை என ஐனநாயக போராளிகள் கட்சியின் துளசி தெரிவித்தார்.
ஐனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஆக்கிரமிப்பு
மேலும் அந்த செய்தி குறிப்பில், வடகடல் எங்கினும் மக்கள் தமது ஜீவனோபாயமாக சிறுகடல் தொழில் மேற்கொள்ப்பட்ட பிரதேசங்களை அவர்களிடம் இருந்து பறித்து அட்டை வளர்ப்பு பண்ணைகளாக மாற்றியிருக்கிறார்கள்.
இன்று அட்டை வளர்க்கும் கடல்பிரதேசங்கள் தமது இயற்கை சமநிலை தன்னையினை இழந்து வருகின்றன. அந்தப் பண்ணைகளில் பாவிக்கப்படும் உயர் தன்மையுடைய வெளிச்சங்களால் மீன்களின் கருக்கள் அழிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சீனாவின் நில ஆக்கிரமிப்புக்கான நகர்வுகளை எமது மக்களின் இருப்பு அவர்களின் பொருளாதாரம் எதிர்காலம் கருதி அவர்களது வருகையை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்.
திருகோணமலையும் பாக்கு நீரிணையும் யார் கையில் வைத்திருக்கிறார்களோ அவர்களால் தான் ஆசியாவையும் இந்துமா சமுத்திரத்தையும் கையாள முடியும்.
இதன் நிமித்தமே போர்த்துகீசர் டச்சுகாரர் ஆங்கிலேயர்கள் வந்தார்கள் வென்றார்கள் ஆண்டார்கள் சென்றார்கள்.
இந்துமாகடலில் ஆதிக்கம்
ஆனால் சீனாவின் நகர்வு வெற்றி பெறுமானால் ஒருபோதும் பாக்கு நீரிணையை விட்டு செல்லமாட்டார்கள். இந்துமாகடல் சீன மையமாகும்.
இந்தியா ஒரு மெத்தன போக்கோடு இலங்கையை எப்போதும் கையாளலாம் என என்னுகின்றது.
அதன் வெளிப்பாடுதான் அண்மைய இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் இந்திய நிதி அமைச்சரின் வருகையின் போதும் தமிழ் தலைமைகள் புறக்கணிக்கப்பட்டமையாகும்.
இந்திய பிரதமரை சந்திக்க கடிதம் அனுப்பப்பட்டும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளமை. இந்துமா சமுத்திரத்தின் பலமான பாக்கு நீரிணையின் இரு கரைகளிலும் ஈழத்தமிழர்களும் தமிழக தமிழர்களும் கேரளமும் தங்கியுள்ளமையே இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு உத்தரவாதமாகும்.
சீனா போன்ற ஒரு பெரிய தேசம் வடக்கில் மீன்பிடிக்க வரவில்லை. தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்து தமிழர்களை இடம்பெயரசெய்து பாக்கு நீரிணையை தம்வசப்படுத்தி தமிழர் தேசத்தை தமது பிராந்தியமாக்கி அதனூடாக முழு இலங்கையையும் பாக்குநீரிணையின் மறுபக்கமான தமிழகத்தையும் கேரளாவையும் தமது கட்டுப்பாட்டு பிராந்தியமாக்குவதே அவர்களது பிரதான இலக்காகும்” என ஐனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.