லண்டனில் ரணிலுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் போராட்டம் (படங்கள்)
பிரித்தானியத் தலைநகர் லண்டனில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்காவுக்கு எதிராக இன்று இரண்டு இடங்களில் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
முதலாவது போராட்டம் ரணில் விக்ரமசிங்க தங்கியிருக்கும் பார்க்லேன் இன்ரர் கொண்டினன்ரல் ஆடம்பர விடுதிக்கு அருகில் இன்று பிற்பகலில் இடம்பெற்றிருந்தது.
இதன்பின்னர் ரணில் விக்ரமசிங்க பங்கெடுக்கும் சர்வதேச ஜனநாயக ஒன்றிய மாநாடு இடம்பெறும் இடத்துக்கு அருகிலும் மாலை 3.30 மணி முதல் எதிர்ப்பு ஒன்றுகூடல் ஒன்றும் நடத்தப்பட்டிருந்தது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்தின், போது ”எமது தேசம் தமிழீழம், எமது தலைவர் பிரபாகரன், ரணிலே வெளியேறு” எனும் கோசங்களை எழுப்பி தமது எதிர்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
உலகளாவிய ரீதியில் பழமைவாத, மற்றும் மைய - வலது கட்சித் தலைவர்களை இணைத்து பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மார்கிரட் தட்சர் ஆரம்பித்த சர்வதேச ஜனநாயக ஒன்றியத்துக்கு அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தன ஆதரவளித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவரது மருமகனான ரணில் விக்ரமசிங்க இந்த அமைப்பின் நாற்பதாவது ஆண்டுவிழா அமர்வில் பங்கெடுப்பது குறிப்பிடத்தக்கது.





