எக்னலிகொட வழக்கு விசாரணை: குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு நீதிமன்றின் உத்தரவு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், தங்களை சாட்சி விசாரணையின்றி விடுவிக்குமாறு கோரி குற்றம்சாட்டப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சமர்ப்பித்த மனுவை கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் நிராகரித்த நிலையில் மீண்டும் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு, சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் குறித்த வழக்கானது பதிவு செய்யப்பட்டு விசாணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட் நிலையில் குற்றம்சாட்டப்பட்ட தரப்பால் மேற்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள்
நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் அரசுத் தரப்பு சாட்சி விசாரணைகள் அனைத்தும் அண்மையில் நிறைவடைந்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இதன்படி அரசுத் தரப்பு சாட்சிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஒரு விசேட கோரிக்கையை முன்வைத்தனர்.
அரசுத் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மிகவும் பலவீனமானவை என்றும், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அவை போதியதாக இல்லை என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.
எனவே, எதிர்த்தரப்பு சாட்சிகளை அழைக்காமலேயே தங்களை இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்து விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் மனுத் தாக்கல் செய்யுள்ளனர்.
எதிர்த்தரப்பு சாட்சி விசாரணை
இந்த வழக்கை விசாரணை செய்யும் நயனா செனவிரத்ன (தலைமை நீதிபதி), நலின் ஹேவாவசம் மற்றும் லக்மாலி ஹேவாவசம் ஆகிய மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுவை விரிவாக ஆராய்ந்த நீதிபதிகள் அமர்வு, குற்றம்சாட்டப்பட்டவர்களின் கோரிக்கையை ஏகமனதாக நிராகரித்தது.
முதற்கட்ட சான்றுகளின்படி , குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கைத் தொடர்வதற்குக் போதுமான சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
எனவே, இந்த வழக்கிலிருந்து பிரதிவாதிகளை உடனடியாக விடுவிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான எதிர்த்தரப்பு சாட்சி விசாரணைகளை எதிர்வரும் வாரம் முதல் தினசரி அடிப்படையில் ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |