பிரகீத் எக்னலிகொட விவகாரம் : அரச தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் 9 பேருக்கு எதிராகச் சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கின் அரச தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவுக்கு வந்துள்ளன.
இவ்விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று (5) மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதி நயனா செனவிரத்ன தலைமையிலான லக்மாலி ஹேவாவசம் மற்றும் நலின் ஹேவாவசம் ஆகியோரை உள்ளடக்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
சட்டமா அதிபர்
இதன்போது, வழக்குத் தொடுநரான சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, அரச தரப்பின் சாட்சி விசாரணைகளை நிறைவுக்குக் கொண்டுவருவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அதன்படி, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், நேற்று (5) இவ்வழக்கின் பிரதான சாட்சியாளரான 4ஆவது சாட்சியாளரைக் குறுக்கு விசாரணை செய்தபோது பதிவுசெய்யப்பட்ட முரண்பாடுகள் தொடர்பிலான அறிக்கை ஒன்றினை நீதிமன்றத்திற்கும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேராவுக்கும் கையளித்தனர்.
அதற்கமைய, இவ்வழக்கு இன்று (6) மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ள நிலையில், பிரதிவாதிகள் சார்பில் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 200 ஆவது பிரிவின் கீழ் விசேட விண்ணப்பம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை அழைக்காமல் தங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பிரதிவாதிகள் தரப்பு நீதிமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டதற்கு அமைய இவ்வழக்கானது இன்று (6) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ராஜபக்சர்களின் உளவாளி என்ற எதிர்வினை: தமிழர்கள் கற்க வேண்டிய இஸ்ரேலின் வியூகங்கள் - நிராஜ் டேவிட் வெளிப்படை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்