சற்றுமுன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ச
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்றுமுன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும், ‘ஏர்பஸ்’ (Airbus) ஒப்பந்தம் தொடர்பான வழக்கின் காரணமாக, உயர் நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் பேரில் அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜானகி சிறிவர்தனவும் நீதிமன்றில் முன்னிலை
இதேவேளை குறித்த விசாரணை தொடர்பில் கடந்த 03ஆம் திகதி நாமல் ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், சிறிலங்கன் விமான சேவைக்கான எயார்பஸ் வானூர்திகளைக் கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், அவரைத் தொடர்ந்து சிறைச்சாலையில் தடுத்து வைத்து எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த 28ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன் காரணமாக, கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் பிணை அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கின் காரணமாக அவர் தொடர்ந்து சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, கிரிஷ் நிறுவனத்தின் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தனவும் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |