தமிழர் பகுதியில் கொடூரம்: பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு - நேர்ந்த துயரம்
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் பெண் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
வீடொன்றின் வெளிப் பகுதியில் கதிரையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் மீது உறவினர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (03) மாலை பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
தீயில் எரிந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (5) குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
55 வயது பெண்
ஆரையம்பதி பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய சின்னத்தம்பி கமலேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது, குறித்த பெண் சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (03) பிற்பகல் சுமார் 4.00 மணியளவில் வீட்டின் முன்பகுதியில் கதிரையில் தனிமையில் அமர்ந்து கொண்டிருந்தார்.
இதன்போது அவருக்கு தெரியாமல் வீட்டின் பின் பகுதியால் சென்ற அந்த பெண்ணின் உறவினரான ஆண் ஒருவர் அந்த பெண் மீது பெட்ரோலை ஊற்றி தீயிட்டதையடுத்து அவர் தீப்பற்றிக் கொண்டார்.
விளக்கமறியல்
இதனையடுத்து குறித்த பெண் சத்தமிட்டதையடுத்து அருகிலுள்ளவர்கள் சென்று தீயை அனைத்து காப்பாற்றி படுகாயமடைந்த அவரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தீயிட்டவர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து தலைமறைவாகி இருந்த குறித்த பெண்ணின் கணவரின் சகோதரியின் கணவரான அவரை புதன்கிழமை (04) கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
செய்தி - கனகராஜா சரவணன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |