நாட்டுக்குள் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘நிழல் அரசு’ - எச்சரிக்கும் ஜனாதிபதி அநுர
இலங்கைக்குள் சக்திவாய்ந்த ‘நிழல் அரசு’ ஒன்று உருவாகியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் குற்ற வலையமைப்பைத் தோற்கடிக்கா விட்டால் நாட்டின் இளைய தலைமுறையினரின் எதிர்காலம் பாதுகாப்பற்றதாக மாறும் என்றும் அவர் தெரித்துள்ளார்.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அலரி மாளிகையில் நடைபெற்ற மதத் தலைவர்கள் மாநாட்டில் உரை யாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இணையான அதிகாரக் கட்டமைப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் கொண்ட இணையான அதிகாரக் கட்டமைப்பு ஒன்று நாட்டுக்குள் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுங்கத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், காவல்துறை உள்ளிட்ட அரச நிறுவனங்களில் போதைப்பொருள் பணத்தின் ஊடாக செல்வாக்குச் செலுத்தப்படுவதாகவும், அரசியல் இயக்கங்களுக்குப் பணம் வழங்கி உள்ளூராட்சி அமைப்புகளிலும் இடம்பிடித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த ஓராண்டில் சுமார் 218 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கஞ்சாவையும் உள்ளடக்கிய வகையில் இந்தப் பெறுமதி 224 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தைக் கைவிட வேண்டிய நிலை
புதிய சட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஜனாதிபதி, தமக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ அளவுக்கு அதிகமான அதிகாரங்கள் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தலைவர்கள் தாங்கள் ஒருநாள் அதிகாரத்தைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் தாம் அதிகாரத்தில் இல்லாத காலத்தில் தாங்கள் உருவாக்கும் சட்டங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதையும் சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் ஆயுதக் குழுக்களை அடிப்படையாகக் கொண்ட குற்றவியல் அரச கட்டமைப்புக்கு ஆதரவானவர்கள், அதற்கு எதிரானவர்கள் என நாடு தற்போது இரு தரப்புகளுக்கு இடையிலான சவாலை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசியல் உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து மதத் தலைவர்களும் பொதுமக்களும் அரசாங்கத்தின் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பங்காளர்களாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சலே உள்ளிட்ட நால்வரின் திட்டமிட்ட செயற்பாடு: நீதிமன்றில் சி.ஐ.டி பகிரங்கம்
போராட்டமும் புலம்பெயர் நிதியும் தமிழினத்திற்குச் சுமையா: கம்பவாரிதி ஜெயராஜுக்கு தாயகத்திலிருந்து எழுந்த காரசாரமான கேள்விகள்