சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) உட்பூசலை எதிர்கொள்ளும் ஒரு கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக, அக்கட்சியின் பல்வேறு பிரிவினரை இன்று (6) தேர்தல் ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைத்து விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தயாசிறி ஜயசேகர, நிமல் சிறிபால டி சில்வா, லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் இந்த விசாரணையில் கலந்துகொண்டுள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழு
உட்பூசலை எதிர்கொள்ளும் ஒரு அரசியல் கட்சியால், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உட்பூசலில் சிக்கியுள்ள ஒரு கட்சி தேர்தலுக்காக வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்க முற்படும்போது, அதன் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகி, அந்தப் பூசலைத் தீர்ப்பதற்கான உடன்படிக்கைக்கு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதனைத் தீர்க்க முடியாவிட்டால், சம்பந்தப்பட்ட கட்சி அந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் விவகாரத்திலும் இனிவரும் காலங்களில் இதே நடைமுறையே பின்பற்றப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |