கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் உயிரிழப்பு!
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த கணவன் மனைவியான கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்லாற்றைச் சேர்ந்த 65 வயதுடைய கணபதிப்பிள்ளை விஜயலட்சுமி என்ற வயோதிப பெண்ணே நேற்று (29) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவருடைய உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த மார்ச் 20ம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிகாடு வயல் பகுதியில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் போராடிக் கொண்டிருந்த இளம் தாய் ஒருவரை மீட்டதுடன் அதே கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டதுடன் வயல் பகுதியில் அந்த இளம் தாயின் 3 வயதும் 4 மாதங்களை கொண்ட பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சூத்திரதாரிகள்
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வவுணதீவு பாவகொடிச்சேனையைச் சேர்ந்த கணவன் மனைவியான சூத்திரதாரிகள் கடந்த பெப்ரவரி 4ம் திகதி மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பு நிலையத்துக்கு பிற்பகல் ஒரு மணியளவில் சென்றிருந்தனர்.

இதன்போது அங்கு வவுணதீவு பாவக்கொடிச்சேனைக்கு தனது மகளிடம் செல்வதற்காக பேருந்துக்காக தனியாக காத்திருந்த 65 வயதுடைய வயோதிபப் பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் சென்ற கொள்ளையர்களான கணவன் மனைவி அந்த வயோதிப பெண்ணுக்கு அருகில் சென்று பேச்சுக் கொடுத்தனர்.
இதையடுத்து குறித்த வயோதிப பெண் தனது கையில் இருந்த 2 பவுண் காப்பு மற்றும் கழுத்தில் இருந்த 5 பவுண் தங்க சங்கிலியை கழற்றி தனது கைப்பையில் வைத்துக் கொண்டார்.
அப்போது அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு நித்திரைக்கு வழங்கும் மாத்திரைகளை கலந்து கொண்ட குளிர்பானத்தை வழங்கிய நிலையில் அதை குடித்து சிறிது நேரத்தில் வயோதிப பெண் மயக்கம் அடைந்ததையடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தப்பியோடினர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
அதன் பின்னர் சுமார் 4 மணித்தியாலத்தின் பின்னர் மயக்கமுற்ற நிலையில் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நீரிழிவு நோய் கொண்ட அவர் மனநிலை மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
எனவே அவருக்கு கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்து காரணமாக அவருக்கு இந்த நோய் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தநிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |