ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை - அமைச்சர் பந்துல குணவர்தன
இலங்கையின் நலன் கருதி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை எனவும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காக எந்தவொரு அரசியல் மாற்றத்தினையும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து அமைக்கும் கூட்டணி வெற்றியளிக்குமா என்று இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
அரசியல் மாற்றங்கள்
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் தற்போது கட்சிகளோ, கொள்கைகளோ கிடையாது. பொருளாதார நெருக்கடிகளிலிருந்து எவ்வாறு நாட்டைக் கட்டியெழுப்புவது என்பதே பெரும்பாலானோரது எதிர்பார்ப்பாகவுள்ளது.
எனவே, நாட்டின் நலன் கருதி இவ்வாறான அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மிகவும் அபாயமான கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
நாட்டில் தற்போது இரு பிரதான குழுக்களே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு குழு நாட்டை முன்னேற்றுவதற்கும் , பிரிதொரு குழு நாட்டை முன்னேற்றுவதற்கான எந்தவொரு அடிப்படை தீர்வும் அற்ற நிலையிலும் உள்ளதாகும்.
சம்பளம் வழங்க முடியாத நிலை
தற்போது அரச உத்தியோகத்தர்களுக்கு கூட சம்பளம் வழங்க முடியாத நிலைமையிலேயே அரசாங்கம் காணப்படுகிறது. இதற்காக கடன் பெற முடியாது. பணத்தை அச்சிடவும் முடியாது.
மீண்டும் மீண்டும் கடன் வழங்குவதால் வங்கி கட்டமைப்புக்கள் வீழ்ச்சியடையும். எனவே இவற்றை தவிர்த்துக் கொள்வதற்காக கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்” - என்றார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
