நாடாளுமன்ற தேர்தல் : வன்னியில் ஆரம்பமான வாக்குப்பெட்டி விநியோகம்
புதிய இணைப்பு
இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வன்னி தேர்தல் தொகுதி மன்னார் (Mannar) மாவட்டத்திற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்று (13) காலை 9.30 மணி தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 98 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்டச் செயலாளருமான க.கனகேஸ்வரன் மற்றும் மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் வி.சிவராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
432 வேட்பாளர்கள் போட்டி
மன்னார் மாவட்டத்தில் இம்முறை 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 432 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
23 கட்சிகளும் 25 சுயேட்சை குழுக்கள் உள்ளடங்கலாக 48 கட்சிகள் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையமாக மன்னார் மாவட்டச் செயலகத்தில் 8 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு தரப்பினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 7 மணிமுதல் எடுத்துசெல்லப்பட்டுள்ளது.
வாக்கெண்ணும் மத்திய நிலையம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்பட்டுவரும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கெடுப்பு நிலையங்களிற்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது.
இதேவேளை முல்லைத்தீவில் 89,889 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் தேர்தல் கடைமைகளுக்காக காவல்துறையினர் மற்றும் 1653 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
வன்னிதேர்தல் (Vanni) மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக வன்னிமாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் வவுனியா (Vavuniya) அரச அதிபருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.
காவல்துறையினரின் பாதுகாப்புடன் வன்னிதேர்தல் மாவட்டத்தில் உள்ள 387வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள், மற்றும் வாக்குச்சீட்டுகள் இன்று (13) அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை சுட்டிக்காட்டினார்.
வாக்களிப்பு நிலையங்கள்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் வன்னிதேர்தல் மாவட்டத்தில் 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் 152 வாக்களிப்பு நிலையங்களும் முல்லைத்தீவில் 137 வாக்களிப்பு நிலையங்களும் மன்னாரில் 98வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த நிலையங்களுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுகள் ஏனைய ஆவணங்கள் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் இருந்து இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டது.
இதேவேளை வன்னிதேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் 306,081 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் கட்மைகள்
அந்தவகையில் வவுனியாவில் 128,585 பேரும் முல்லைத்தீவில் 86, 889 பேரும் மன்னாரில் 90, 607 பேரும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
தேர்தல் கடமைகளுக்காக வன்னியில் 4,995 அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 3,898 காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத்தரப்பினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் குறித்து இதுவரை 107 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் 50 முறைப்பாடுகளும், மன்னார் மாவட்டத்தில் 22 முறைப்பாடுகளும், முல்லைத்தீவில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. அவை சிறிய முறைப்பாடுகளாகவே உள்ளது.
இதேவேளை வவுனியாவில் சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியும், மன்னார் மாவட்டத்தில் மாவட்டச்செயலகமும், முல்லைத்தீவு மத்திய மகாவித்தியாலமும் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களாக செயற்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |