அநுரவிற்கு எதிரான முறைப்பாடு: மௌனம் காக்கும் ஆணைக்குழு: வெடிக்கும் சர்ச்சை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆணைக்குழு சுதந்திரத்தை இழந்து அரசாங்கத்திற்கு பயந்து விசுவாசமாக செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜனாதிபதி அநுர, தேர்தலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு அறிக்கையை வெளியிட்டதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு முறைப்பாடு அளித்து 15 நாட்களாக தேர்தல் ஆணைக்குழு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிவதாக அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழு மௌனம்
உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெல்லாத நிறுவனங்களுக்கு அரச நிதியை ஒதுக்குவதை பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்ற ஜனாதிபதியின் கூற்று தீவிரமானது என்றும், தேர்தல் ஆணைக்குழு ஆரம்பத்திலிருந்தே இந்த விடயத்தில் மௌனம் காத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி என்ற முறையில் அநுர குமார திசாநாயக்க இவ்வளவு கடுமையான குற்றத்தைச் செய்யும்போது, தேர்தல் ஆணைக்குழு பயம், பாரபட்சம் மற்றும் மெதுவாகச் செயல்படுவதாகக் கூறிய நளின் பண்டார, இதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாடு அளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காரணம்
பிற கட்சிகளில் இருந்து போட்டியிடும் இளம் வேட்பாளர்களை திருடர்கள் என்று முத்திரை குத்தி அதிகாரத்தை இழக்கும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்காது என்று ஜனாதிபதி கூறியதற்குக் காரணம், 40% உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை இழக்கும் அபாயம் இருப்பதுதான் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமை தேர்தல் பார்வையாளர்கள் உட்பட ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணைக்குழுவிற்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை அனைவரும் எதிர்க்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேலும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
