தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிக்கை
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) நிறைவடைந்த நிலையில், வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களைச் சென்றடைந்ததை அடுத்து, முக்கிய வாக்கு எண்ணும் மையங்களில் 7.15க்கு பின்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க,தேர்தல் முடிவுகள் தேர்தல் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றவுடன் அவை மீள்பரிசீலனை செய்யப்பட்டு ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என தெரிவித்தார்.
முடிவுகள் எவ்வாறு வெளியிடப்படும்
குறிப்பாக மூன்று முறைகள் மூலம் இந்த முடிவுகளை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலில் தொகுதி அளவில் வாக்குப்பதிவு முடிவுகள் வெளியிடப்படும். அதன்பின்னர், மாவட்ட அளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகும். அதனுடன், ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழு பெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அறிவிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
விருப்பத்தேர்வு வாக்குகள் எண்ணும் பணி
முடிவுகள் வெளியானவுடன் ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் விருப்பத்தேர்வு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். எவ்வாறாயினும், வாக்கு எண்ணிக்கையின் போது, ஆசனங்களை வென்ற அல்லது எம்.பி.களாக தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் விருப்பத் தேர்வு வாக்குகளே எண்ணப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு தகுதியற்ற அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகள் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |