போருக்கு மத்தியில் இன்று ரஷ்யாவில் தேர்தல்! புடினுக்கு எதிராக களமிறங்கும் மூவர்
ரஷ்யாவில் இன்று அதிபர் தேர்தல் வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.
இந்த தேர்தல் வாக்கெடுப்பு, இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான போர் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், இந்த இரண்டு ஆண்டுகளில் ரஷ்யாவில் இடம்பெறும் முதல் அதிபர் தேர்தல் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வேட்பாளர்கள்
ரஷ்யாவின் தற்போதைய அதிபர் விளாடிமீர் புடினுக்கு எதிராக லியோனிட் ஸ்லட்ஸ்கி, நிகோலாய் கரிடோனோவ் மற்றும் விளாடிஸ்லாவ் தவன்கோவ் ஆகியோர் இந்த தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர்.
இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமாகும் தேர்தல் வாக்கெடுப்பானது இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக நாளை மற்றும் நாளை மறுதினம் தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 மாநிலங்களில் உள்ள மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவுள்ள நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் ரஷ்யர்களுக்கு இணையவழி மூலம் அல்லது அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்களின் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் வெற்றி
இந்த அதிபர் தேர்தலில் ஐந்தாவது தடவையாகவும் போட்டியிடும் விளாடிமீர் புடின், மீண்டும் வெற்றி பெறுவார் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், மக்கள் ஆணையுடன் ரஷ்யாவின் அடுத்த அதிபராக தெரிவு செய்யப்படும் நபர் எதிர்வரும் மே மாதம் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் பகுதிகளில் உள்ளவர்களும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |