அதிபர் தெரிவு - தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து எமது நாட்டின் பொருளாதார பிரச்சினை மற்றும் நாட்டு மக்களின் அபிலாசைகளை தீர்க்கக்கூடிய புதிய அதிபரை தெரிவு செய்வது தார்மீக பொறுப்பாகும் என சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சிறிஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட குருபீட காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்ட போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
“இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் நாட்டின் அதிபர் பதவி விலகியதன் காரணமாகவும் புதிய அதிபர் தெரிவு இடம்பெறவுள்ளது.
225 உறுப்பினர்களுக்கும் பொறுப்பு
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களுக்கும் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடியதாகவும் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய வகையிலும் ஒரு சிறந்த அதிபரை தெரிவு செய்யக்கூடிய பொறுப்பு தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கின்றது.
இச்சந்தர்ப்பத்தில் தமிழ் பேசும் கட்சிகள் கட்சி பேதங்களை மறந்து முஸ்லிம் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய அதிபரை தெரிவு செய்யக்கூடிய தார்மீக பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.
