இலங்கையில் டிஜிட்டல் மயமாகும் போக்குவரத்து சேவை
அடுத்த ஆண்டளவில் பயணிகளுக்கு திறமையான மற்றும் வசதியான பொது போக்குவரத்து சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Vanniyarachchi) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் வரவு செலவு திட்டம் மீதான குழுவிவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
முதற்கட்டமாக "சஹசர " திட்டத்தின் மூலம் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் 2000 தனியார் பேருந்துக்களுக்கு ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
அத்துடன் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் மக்கள் வசதியை பெறுவதற்கு தொலைப்பேசி செயலி ஒன்று இலவசமாக வழங்கப்படும்.
இச் செயலியின் மூலம் மக்கள் தங்கள் அன்றாட பயணங்களுக்கு அழைத்து செல்லும் பேருந்து வரும் நேரம் மற்றும் அதில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விரிவான தகவல்களை பெற முடியும் என மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொழும்பு வீதிகளில் மின்சாரத்தால் இயக்கப்படும் பேருந்து விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே இதுகுறித்து தெரிவிக்கப்பட்ட நிலையில்,முதலில் குறுந்தூர போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் மேலும் வாகன இறக்குமதி மீதான தடை நீக்கப்படும் போதெல்லாம் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சுற்றுசூழலுக்கு உகந்த மின் சக்தியின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கையின் முக்கிய ஆறுகள் மற்றும் நீர் ஓட்டத்தில் மிதக்கும் சூரிய சக்தி அமைப்புக்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் நிலக்கரி மற்றும் அனல் மின்சார பயன்பாடு விரைவில் நிறுத்தப்பட்டும் என அவர் கூறினார்.