இம்மாத இறுதிக்குள் குறைவடையும் மின் கட்டணம்: நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர்
இலங்கை மக்களுக்கான மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான தரவுகளை மின்சார சபை ஏற்கனவே பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, மின் கட்டணத்தை குறைப்பதற்கான அடிப்படை வேலைகள் இந்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படுமென இந்திக அநுருத்த தெரிவித்துள்ளார்.
இறுதி தீர்மானம்
இலங்கையில் மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளமை தொடர்பில் மாத்திரம் தம்மால் கருத்து வெளியிட முடியுமெனவும் அது எத்தனை வீதத்தால் குறைக்கப்படுமென்பது தொடர்பில் கருத்து வெளியிட முடியாதெனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த தெரிவித்துள்ளார்.
மின்கட்டணம் குறைக்கப்படுவது தொடர்பான இறுதி தீர்மானத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மாத்திரம் மேற்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, மின் கட்டணம் குறைக்கப்படும் வீதம் தொடர்பில் ஆணைக்குழுவால் அறிவிக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் திட்டம்
இலங்கையில் தற்போது மின்சார கட்டணத்தை குறைத்து பின்னர் அதனை மேலும் அதிகரிப்பது அரசாங்கத்தின் திட்டம் அல்ல என இந்திக அநுருத்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிர்ணயிக்கப்படும் புதிய மின் கட்டணத்தை எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தவது அமைச்சின் நோக்கமென அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |