யாழ். தாவடி ஆலயத்தில் நடந்த அனர்த்தம்...! யானையால் காலினை இழந்த பெண் - அம்பலப்படுத்தும் சட்டத்தரணி
யாழ்ப்பாணம் (Jaffna) தாவடியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் அண்மையில் திருவிழாவின் போது கொண்டுவந்த யானையினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பெண் ஒருவரின் கால் அகற்றப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவிக்கையில், “திருவிழாவின் போது பாதிக்கப்பட்டவர் எனது நெருங்கிய உறவினர் ஆவார்.
இந்த நிலையில் திருவிழாவிற்கு கொண்ட வரப்பட்ட குறித்த யானை சரியான விதத்தில் வன விலங்கு திணைக்களத்திடமிருந்து முறையான மருத்துவ சான்றிதழ்களைப் பெற்று கொண்டு வரப்பட்டதா என்று ஒரு கேள்வி இருக்கின்றது.
குறித்த யானை முற்றும் துறந்த நிலையில் இருக்கின்றதா என்பதை பரிசோதிக்கும் வகையிலான செயற்பாடுகளே அங்கு இடம்பெற்றது.
அதாவது யானைக்கு முன் வெடியைக் கொழுத்தினார்கள், மிகப்பெரிய மின்குமிழ்களை ஒளிரச் செய்தனர், யானையின் முன்னுக்கு நின்று தீப்பந்தங்களை சுழற்றி, பொது மக்களை மிக அருகில் போவதற்கு அனுமதித்தமை போன்றவற்றைச் செய்து யானையை சோதித்துப் பார்த்துள்ளனர்.
அந்த யானை நான்கு குழந்தைகளை நோக்கி ஓடி வந்த நிலையில் அந்தக் குழந்தைகளின் தாயான பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளைக் காப்பாற்ற முயன்று தனது காலை இழந்துள்ளார்.
இந்த ஆலய நிர்வாகத்தினர் இது தொடர்பான இழப்பீடு சம்மந்தமாக இன்று வரை பேசவில்லை. அத்துடன் இது தொடர்பாக நியாயமான கருத்துக்களை வெளியிட்டவர்களை சம்பந்தப்பட்டவர்கள் மிரட்டியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்றைக்கு கோயில்கள் ஒவ்வொருவருடைய பணபலத்தையும் காண்பிக்கின்ற கேளிக்கைக்குரிய இடமாக மாறி வருகின்ற போக்கு காணப்படுகின்றது.
எனவே இது தொடர்பில் பொது மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். பாதுகாப்பில்லாத திருவிழாக்களை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
