பயணிகளை தாக்கும் காட்டுயானைகள் - அச்சுறுத்தலை தணிக்க உடனடி நடவடிக்கை
கதிர்காமம்-புத்தல வீதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகள் வாகனங்களை தாக்குவதால் மனித உயிர்களுக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலர் கால்நடைகளுக்கு உணவளிப்பதாலும், சில காலமாக விலங்குகள் பழகிவிட்டதாலும் காட்டு யானைகள் தாக்க ஆரம்பித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், விலங்குகளுக்கு உணவளிப்பதை தவிர்க்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
51 வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளது
யால சரணாலயத்தில் வாழும் காட்டு யானைகள் புத்தல - கதிர்காமம் பிரதான வீதியில் நடமாடுவது வழமையான காட்சியாகும். சுற்றுலா பயணிகள் காட்டு யானைகளுக்கு உணவளிப்பதை அடிக்கடி காணலாம்.
இதனால், இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு இந்த காட்டு யானைகள் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
வன விலங்குகளுக்கு மக்கள் உணவளிப்பதால், சமீபகாலமாக அந்த விலங்குகள் வாகனங்களைத் தாக்கி உணவு தேடி அலையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
கதிர்காமம் - புத்தல வீதியில் கல்கே சோதனைச் சாவடிக்கு உட்பட்ட சுமார் 10 கிலோமீற்றர் பிரதேசத்தில் இந்த நிலைமை கடுமையாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 10 காட்டு யானைகள் இவ்வாறு உணவு தேடி அலைவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 51 வாகனங்கள் காட்டு யானைகளால் தாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனித உயிர்களுக்கும் பெரும் அச்சுறுத்தல்
மேலும், வன விலங்குகளால் 8 வாகன விபத்துகள் நிகழ்ந்துள்ளதுடன், ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. இவ்வாறான நிலையில் யால இலக்கம் 2 வலயத்திற்குட்பட்ட இந்தப் பகுதிக்கு பொறுப்பான வனஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.யு. காட்டு யானைகளுக்கு உணவளிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இன்று ஹபரணை - மின்னேரிய வீதியிலும் அவ்வாறானதொரு நிலை காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.இதனால் அவ்வழியாக செல்லும் மக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாலையை பயன்படுத்தும் சிலர் காட்டு யானைகளின் அருகில் சென்று படம் எடுத்து யானைகளுக்கு உணவளிக்கின்றனர்.
இந்நிலையில், வன விலங்குகள் மட்டுமின்றி, மனித உயிர்களுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தலைத் தணிக்க உடனடி நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் பொறுப்பாக இருப்பதைப் போலவே, சுற்றுலாப் பயணிகளாகிய உங்களுக்கும் பெரும் பங்கு உள்ளது என்பதை நாங்கள் மறந்துவிடக் கூடாது என கூறியுள்ளார்.