எலன் மஸ்க்கின் இலங்கை விஜயம்: ரணில் விடுத்துள்ள அழைப்பு
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) அழைப்பின் பேரில், எலன் மஸ்க் (Elon Musk) இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.
இந்தோனேஷியாவிற்கு (Indonesia) இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, எலன் மஸ்க்கை நேற்று (19) சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
மஸ்க்கிடம் கோரிக்கை
குறித்த கலந்துரையாடலின் போது இலங்கையில் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய வசதி சேவையை ஆரம்பிக்க முதலீடு செய்யுமாறு அதிபர், எலன் மஸ்க்கிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இலங்கையின் கிராமிய கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு ஸ்ரார்லிங்க் இணைய வசதி சேவை முக்கியமாக அமையும் எனவும் அதிபர், எலன் மஸ்க்கிடம் தெரிவித்திருந்தார்.
விஜயம் செய்யும் திகதி
ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையை, ஏற்றுக்கொண்ட எலன் மஸ்க் ஸ்டார்லிங்க் செய்மதி இணைய வசதி சேவையை ஆரம்பிக்க இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.
எனினும், இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அது தொடர்பில் எலன் மஸ்க் தரப்புடன் இலங்கை அதிகாரிகள் தொடர்புகளை பேணி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |