கனடாவை குறிவைக்கும் எலான் மஸ்க்! ட்ரூடோ தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்
அடுத்து நடக்கும் கனடா தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தோல்வி அடைவார் என்று எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார்.
அதாவது, சமூக வலைத்தள ஊடகமான X-ல், சுவீடன் நாட்டை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் "ஜெர்மனில் உள்ள சோசலிச அரசு சரியத் தொடங்கிவிட்டது.விரைவில் இங்குத் தேர்தல் நடைபெறப் போகிறது" என்று ட்வீட் செய்திருந்தார்.
அதற்கு எலான் மஸ்க், ஜெர்மனி ஜனாதிபதி ஓலாஃப் ஸ்கோல்ஸ் முட்டாள் என்றும் அங்குள்ள கூட்டணி அரசு வீழ்ச்சி அடையும் என்றும் குறிப்பிட்டார்.
எலான் மஸ்க்கின் ட்வீட்
அதனை தொடர்ந்து, அதற்கு பதில் செய்த ஒருவர், "கனடாவில் ட்ரூடோவை அகற்ற உங்கள் உதவி தேவை எலான் மஸ்க்" என்று பதிவிட்டிருந்தார்.
அதற்குச் சற்றும் யோசிக்காத எலான் மஸ்க், "அவர் வரும் தேர்தலில் காணாமல் போய்விடுவார்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் பேசுபொருளாகி வருகின்றது.
அதேநேரம் ட்ரூடோவுக்கு எதிராக எலான் மஸ்க் கருத்துச் சொல்வது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களிலும் அவர் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்கிற்கு மொத்தம் 3 நாடுகளில் குடியுரிமை இருக்கிறது. பிறந்த நாடு என்ற அடிப்படையில் தென் ஆபிரிக்கா, அவரது தாய் கனடா நாட்டை சேர்ந்தவர் என்பதன் மூலம் கனடா நாட்டின் குடியுரிமையையும் பெற்றார்.
அதேபோல 2002ம் ஆண்டு அவர் அமெரிக்கக் குடியுரிமையையும் பெற்றார். கடந்தாண்டு கனடா அரசு நிகழ்நிலை ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் எல்லாம் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும் என்ற விதியை கொண்டு வந்தார்.
கனடா அரசியல்
அப்போது கனடாவில் பேச்சு சுதந்திரத்தை ட்ரூடோ அரசு நசுக்குவதாக எலான் மஸ்க் விமர்சித்து இருந்தார். அதற்கு முன்பு 2022ம் ஆண்டு ஹிட்லர் உடனும் ட்ரூடோவை அவர் ஒப்பிட்டு இருந்தார்.
அதாவது 2022ல் கனடா நாட்டில் லாரி ஓட்டுநர்களின் போராட்டம் மிகப் பெரிதாக வெடித்த நிலையில், போராட்டத்தைக் கட்டுப்படுத்த ட்ரூடோ அவசர நிலை கொண்டு வந்தார். கனடா வரலாற்றில் அவசர நிலை கொண்டு வரப்படுவது அதுவே முதல்முறையாகும் எனவே ட்ரூடோவை ஹிட்லருடன் ஒப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்து இருந்தார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் வெற்றிக்கு எலான் மஸ்க் பிரசாரம் செய்தமையே காரணம் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து கனடா அரசியலிலும், தனது கருத்துக்களை பதிவிட ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |