காணாமற்போன மயக்க மருந்து நிபுணர் :கடும் நெருக்கடியில் வைத்தியசாலை
எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் மயக்க மருந்து நிபுணர் பல நாட்களாக பணிக்கு சமுகமளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பணிக்கு வராதமை தொடர்பாக சம்பந்தப்பட்ட மயக்கவியல் நிபுணர் வைத்தியசாலை அதிகாரிகளுக்கு எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தற்போது தான் பணிக்கு திரும்ப மாட்டார் என வேறு ஒருவரின் வாட்ஸ்அப் எண் மூலம் மருத்துவ நிபுணர் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சத்திரசிகிச்சைகளை நிறுத்த வேண்டிய நெருக்கடி நிலை
கடந்த வெள்ளிக்கிழமை முதல் விசேட வைத்தியர் வைத்தியசாலைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகளை நிறுத்த வேண்டிய நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
இந்நிலைமை எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் இரண்டு சத்திரசிகிச்சை நிலையங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக இந்த வைத்தியசாலையில் இருந்த ஒரு மயக்க மருந்து நிபுணர் கடந்த 10.01.2022 அன்று வெளிநாடு சென்றதுடன், மற்றுமொரு மயக்க மருந்து நிபுணர் 10.04.2023 அன்று வெளிநாடு சென்றுள்ளார். குறித்த வைத்தியர்கள் இதுவரை இலங்கை திரும்பவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றம்
இதன் காரணமாக சத்திரசிகிச்சையை எதிர்நோக்கியுள்ள நோயாளிகள் இரத்தினபுரி மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையின் ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரும் கடந்த ஓகஸ்ட் மாதம் நாட்டை விட்டு வெளியேறியிருந்தமை பின்னர் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.