தான் வடிவமைத்த வாகனத்திலேயே இறுதி பயணத்தை மேற்கொள்ளவுள்ள இளவரசர் பிலிப்
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கணவரும், இளவரசருமான பிலிப் (99) வயது மூப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரது இறுதிச் சடங்கு வரும் 17ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து இளவரசர் பிலிப் இறுதி ஊர்வலம், வேட்டையாடுவதற்கான அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட வாகனத்தில் நடைபெற உள்ளது. அவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட விசேட லாண்ட்ரோவரில்தான் இறுதி யாத்திரை செல்ல இருக்கிறார்.
இளவரசர் பிலிப் உடல் வரும் 17ம் திகதி மாலை வின்சர் கோட்டையில் இருந்து அருகிலுள்ள செயின்ட் ஜோர்ஜ் சப்பலுக்கு இறுதி சடங்கிற்காக எடுத்துச் செல்லப்பட உள்ளது. இதற்காக, அவர் வடிவமைத்து வாங்கிய அதே லாண்ட்ரோவர் டிபென்டர் கன் பஸ் எஸ்யூவி பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், ஒருமுறை தனது மனைவி ராணி இரண்டாம் எலிசபெத்திடம் பேசிக் கொண்டிருக்கும்போது, தான் இறந்துவிட்டால், இந்த லாண்ட்ரோவரில் வைத்து வின்சருக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று கூறி இருக்கிறார். அவரது விருப்பத்தின் பேரிலேயே இந்த வாகனம் தற்போது அவரது இறுதி ஊர்வலத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றி, தனது இறுதி யாத்திரையிலும் லாண்ட்ரோவர் காரில் பிலிப் செல்ல இருப்பது இங்கிலாந்து மக்களிடேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இளவரசர் பிலிப் இறுதி ஊர்வலத்தில் இங்கிலாந்து இராணுவத்தினர், அரச குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட உள்ளனர். இங்கிலாந்து பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கூட கலந்து கொள்ளவில்லை. அரச குடும்பத்திலிருந்து பிரிந்து வாழும் பிலிப் பேரன் ஹாரி தற்போது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள இங்கிலாந்து வந்துள்ளார். பிலிப்பின் இறுதி ஊர்வலம் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.