புத்தாண்டு காலத்தில் குறைந்த விலையில் பொருட்கள் - மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்
புதிய இணைப்பு
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான மானிய நடவடிக்கையாக பண்டிகைக் காலத்திற்கான உணவுப் பொதி ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இன்று (17) இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
குறைந்த விலையில் உணவுப் பொருட்கள்
இதன் மூலம் மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியும்.
புத்தாண்டு காலத்தில் லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் அரிசி, ரின் மீன், பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் கருவாடு உள்ளிட்ட உலர் உணவுப் பொதியை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தப் பொதியை வழங்குவதற்கான செலவுக்காக வரவு செலவுத் திட்டத்திலிருந்து 1,000 மில்லியன் ரூபாயை ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
எமது அரசாங்கத்தில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தரமான மற்றும் உரிய விதத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகள்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டில் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என்றும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அநுர குறிப்பிட்டுள்ளார்.
2028 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும் போது நாட்டை அபிவிருத்தி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் 2025 ஆம் ஆண்டுக்குள் 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழல் நிறைந்த ஆட்சி, தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பொறுப்பற்ற நிர்வாகமே நாடு எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்குக் காரணம்.
அந்த காரணங்களாலேயே மக்கள் வரிசையில் நின்று இறக்க நேரிட்டதாக என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, ஏழை மக்கள் மிகவும் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 14 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்