எரிவாயுவை போர்க்கருவி ஆக்கிய ரஷ்யா! ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பு நாடுகளுக்கு எச்சரிக்கை
ரஷ்யாவின் எரிவாயு விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும் நிலைமையை எதிர்கொள்வதற்கு தயாராகுமாறு ஐரோப்பிய ஒன்றியம் உறுப்பு நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் வரை எரிவாயுவின் பயன்பாட்டை 15 வீதத்தால் குறைக்குமாறும் ஐரோப்பிய ஆணைக்குழு, ஒன்றியத்தில் உள்ள உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளது.
எரிவாயு விநியோகத்தை ரஷ்யா முழுமையாக துண்டிக்கும் என்பது ஊகம்
ஐரோப்பா ஒன்றிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா முழுமையாக துண்டிக்கும் என்பது ஊகத்தின் அடிப்படையிலான ஒன்றென ஐரோப்பிய ஆணைக்குழு கூறியுள்ளது.
எனினும் எரிவாயு விநியோகமானது சட்ட பிணைப்பு கொண்ட ஒன்றெனவும் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு செல்லும் முக்கியமான நோர்ட் ஸ்றீம் வன் குழாய் ஊடான எரிவாயு விநியோகம் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 10 நாட்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த குழாயின் பராமரிப்பு பணிகள் இன்று நிறைவுபெறுவதாக தெரிவிக்கப்படும் நிலையில், மீண்டும் எரிவாயு விநியோகத்தை ரஷ்யா வழமைக்கு கொண்டுவராது என்ற கரிசனைகள் எழுந்துள்ளன.
ஐரோப்பா கடந்த ஆண்டு தனது இயற்கை எரிவாயுவின் 40 வீதத்தை ரஷ்யாவிடம் இருந்தே பெற்றிருந்ததுடன், ஐரோப்பாவில் ரஷ்யாவின் எரிவாயுவை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக ஜேர்மனி காணப்படுகுின்றது.
ஜேர்மனிக்கு அடுத்தபடியாக இத்தாலி அதிக அளவான எரிவாயுவை ரஷ்யாவிடம் இருந்து பெற்றுவருகின்றது.
எனினும் உக்ரைன் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பல ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா துண்டித்துள்ளது.
எரிவாயுவை வைத்து ஐரோப்பிய ஒன்றியத்தை ரஷ்யா அச்சுறுத்துகின்றது
இந்த நிலையில் எரிவாயுவை வைத்து ஐரோப்பிய ஒன்றியத்தை ரஷ்யா அச்சுறுத்துகின்றது எனவும் எரிவாயுவை ஓர் ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஊர்சுலா வெண்டர் லெயன் கூறியுள்ளார்.
ஆகவே பகுதி அளவில், அல்லது பாரிய அளவில் அல்லது முழுமையாக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா துண்டிக்கலாம் என்பதால், அந்த நிலைமையை எதிர்கொள்ள நாடுகள் தயாராக வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.