முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!
முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தலைத் தொடர்ந்து, இன்று (20) காலை அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
ஜீ.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்று தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்றுக்கு அமைவாகவே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்ட அறிவித்தல்
இதேவேளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்புக்கமைய அங்கு செல்வேன் எனவும் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும் நேற்று (19) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று சமூகமளிக்குமாறு எனக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டிருக்கிறது.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததன் பின்னர், இந்நாட்டின் வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற அமைச்சு சார்ந்த கலந்துரையாடல்கள் குறித்த சில தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கே அழைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் முன்னிலையில் இடம்பெறும் விசாரணையொன்றுக்கு அத்தகவல்கள் தொடர்புடையவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற கலந்தரையாடல் பற்றிய விபரங்களை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு செல்லவுள்ளேன். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |