இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மைத்திரி
புதிய இணைப்பு
உமா ஓயா பல்நோக்குத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட கொடுப்பனவு ஒன்று தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
காலை 9.30 மணியளவில் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த அவர், சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் பிற்பகல் 12.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் ஈரான் நாட்டின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட உமா ஓயா திட்டமானது, ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உமா ஓயா திட்டம்
இதனால் திட்டப் பணிகளைத் தொடர அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இது குறித்தே தன்னிடம் விளக்கம் கோரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அரசியலில் தனது நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், தான் தற்போது தீவிர அரசியலில் ஈடுபடவில்லை என்றும், யுத்தம் போன்றதொரு சூழல் நிலவும் இத்தருணத்தில் மே தினத்தைக் கொண்டாட முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சர்ச்சைக்குரிய 2.5 மில்லியன் டொலர் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அதன் துல்லியமான விபரங்கள் தெரியாமல் அது குறித்து எதனையும் கூற முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை (28) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடைபெற்று வரும் விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்று (28) இவ்வாறு அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |