வடக்கில் உயர்தரப் பரீட்சை மோசடி - அதிபர் மற்றும் இரு ஆசிரியர்களுக்கு பணித்தடை!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு மாணவன் ஒருவனுக்கு பரீட்சை மண்டபத்திற்கு வெளியே இருந்து உதவியதற்காக இரண்டு ஆசிரியர்களுக்கு இடைக்காலப் பணித்தடை வழங்கப்பட்டுள்ளது.
பரீட்சை மண்டபத்திற்கு வெளியிலிருந்து தொலைபேசி மூலம் இவர்கள் வழங்கிய விடைகளை மண்டபத்தினுள் இருந்து கேட்டு எழுதிக்கொண்டிருந்த வேளை மாணவன் சிக்கியுள்ளார்.
விசாரணையின் அடிப்படையில், விடை எழுதுவதற்கு உதவிய இரு ஆசிரியர்கள் மீதும் குறித்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய மாணவன், பாடசாலை அதிபரின் மகன் எனத் தெரியவந்துள்ளதுடன், அதிபரும் இந்த மோசடியில் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பணித்தடை
பரீட்சைக் கடமையில் இருந்த ஆசிரியர் ஒருவர் தனது தொலைபேசி மூலம் மற்றைய ஆசிரியருக்கு விடைகளைக் கூறியுள்ளதுடன், மற்றைய ஆசிரியர் அவற்றை மாணவனுக்குத் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியிருக்கின்றார்.
குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, மாணவனின் பெறுபேறு இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு அதிபர் மற்றும் இரு ஆசிரியர்களுக்கும் இடைக்காலப் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை, வட மாகாண கல்வி அமைச்சின் பதில் செயலாளர் வரதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

