முள்ளிவாய்க்காலில் தொடரும் விடுதலைப்புலிகளின் உபகரணங்களைத் தேடும் அகழ்வுப் பணிகள்
விடுதலைப் புலிகளின் இராணுவ உபகரணங்களைத் தேடி முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்படும் அகழ்வு நடவடிக்கை நான்காவது நாளாக இன்றும் (26) தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை கடந்த 23.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
நேற்று (25) மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை இடைநிறுத்தப்பட்டு மீண்டும் இன்றைய தினம்(26) நான்காவது நாளாக அகழ்வு பணிகள் தொடரப்பட இருக்கின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை
இது தொடர்பாக முல்லைத்தீவு காவல்துறை விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த விடயம் கடந்த 19.11.2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தில் தோண்டுவதற்கு நீதிமன்றத்தில் கடந்த 19 ஆம் திகதி நீதிபதியின் அனுமதி பெறப்பட்டது.
அதனையடுத்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் காவல்துறையினர், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் காவல்துறையினர் ஆகியோரின் பிரசன்னத்துடன் குறித்த அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |