கோரிக்கைகளை நிறைவேற்றவும்- அரச தலைவர் விடுத்துள்ள பணிப்புரை
நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, முழு அரச சேவையும் பாதிக்காதவாறு தாதியர்களின் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பணிப்புரை விடுத்துள்ளார்.
அரச சேவை தாதியர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, அரச தலைவர் செயலகத்தில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரச தலைவர் இந்த ஆலோசனையை வழங்கியதாக அரச தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தாதியர் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல், தரம் இரண்டில் இருந்து தரம் ஒன்றுக்கு முன்கூட்டியே பதவி உயர்வுகளை வழங்குதல், 36 மணித்தியாலங்களாகக் காணப்படும் சேவைக் காலத்தை வாரத்துக்கு 05 நாட்களுக்கான 30 மணித்தியால சேவைக் காலமாகக் கருதுதல், மருத்துவ நிபுணர்களுக்கு ரூ.35,000 DAT கொடுப்பனவு விகிதாசாரப்படியான ரூ.10,000 கொடுப்பனவு, சீருடைக்கான கொடுப்பனவுகளுக்குரிய சுற்றுநிரூபத்தை வெளியிடுதல் மற்றும் அடிப்படைச் சம்பளத்தில் 1/100 வீதம் மேலதிகச் சேவைக் கொடுப்பனவு போன்ற கோரிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
