வர்த்தகத்திற்கான பொருளாதாரத்தை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கம்! சஜித்
வர்த்தகத்திற்கான பொருளாதாரத்தையும், சமூக சூழலையும் உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்தள்ளார்.
கொழும்பில் நேற்று(06) இடம்பெற்ற கொழும்பு நகர வர்த்தக சமூகத்தினுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சுதந்திரமான பொருளாதார வர்த்தகத்தை பலப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.
மூடப்பட்ட பொருளாதாரம்
70 - 77 காலப்பகுதியில் எமது நாடு மூடப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மூடப்பட்ட சோசலிச பொருளாதார திட்டத்தினால் எமது நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பை புத்தகங்களை வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.
இந்த மூடப்பட்ட பொருளாதாரம் 1977 ஆம் ஆண்டு திறந்த பொருளாதார புரட்சியாக மாறிய காலத்தில் பெருமளவிலான வர்த்தகர்கள், தொழில் முனைவோர்கள் சிறந்த வர்த்தகங்களை ஆரம்பித்தனர்.
அவர்கள் இன்று இந்த திறந்த பொருளாதாரத்தின் பிரதிபலனை அனுபவித்து வருகின்றார்கள். அத்தோடு இந்த திறந்த பொருளாதாரம் முறையை மனிதாபிமான முறையில் பாதுகாக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி
இந்தத் திறந்த பொருளாதார முறைக்கு மாற்றீடாக வேறெந்த ஒரு முறையும் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. நேயமிக்க வர்த்தகத்திற்கான பொருளாதாரத்தையும், சமூக சூழலையும் உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும்.
தற்பொழுது காணப்படுகின்ற வர்த்தகங்களை விரிவுபடுத்துவது மாத்திரமல்லாமல், அதிகளவில் ஊக்குவிப்பதன் ஊடாகவும், தனியார் தொழிற்துறையை பலப்படுத்துவதன் ஊடாகவும், நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும்.உலகிலே பரீட்சித்துப் பார்க்கப்பட்ட வெற்றிகரமான வேலை திட்டங்கள் உண்டு.
மனிதாபிமான முதலாளித்துவ சமூக ஜனநாயக பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தி, வர்த்தகர்களின் வருமானத்தையும் இலாபத்தையும் மேலும் அதிகரிக்கும் வகையிலான சூழலொன்றை உருவாக்குவோம்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |