மன்னார் கடலில் வெடிப்புச் சம்பவம் : இரண்டு கடற்றொழிலாளர்கள் படுகாயம்
மன்னார் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் இன்று வியாழன் (21) மதியம் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்கள் இருவர் கடலில் மிதந்து வந்ததாக கூறப்படும் பொதியை சோதனையிட்ட போது குறித்த பொதி வெடித்ததில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த எஸ்.ரமேஷ் (வயது - 37) மற்றும் ஏ. ஆரோக்கியநாதன் (வயது - 37) என தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி
மன்னார்(mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இவர்கள் இருவரும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
கடலில் மிதந்து வந்த பொதியை எடுத்து தாம் சோதனை செய்த போது குறித்த பொதி வெடித்துள்ளதாக காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் வாக்கு மூலம் வழங்கி உள்ளனர்.
எழுந்துள்ள சந்தேகம்
எனினும் மன்னார் பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற கடற்றொழிலாளர்கள் சிலர் தடை செய்யப்பட்ட டைனமைட் வெடி பொருளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்ற நிலையில் குறித்த கடற்றொழிலாளர்கள் இருவரும் டைனமைட் வெடி பொருளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட போது வெடிப்பு சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |