இந்திய தலைநகரை உலுக்கிய கார் வெடிப்பு..! நேரில் கண்டவரின் வாக்குமூலம்: அதிர்ச்சியில் மோடி அரசு
டெல்லி (Delhi) செங்கோட்டைக்கு அருகே நேற்று (10) மாலை கார் ஒன்று தீப்பற்றி வெடித்ததில் 13 பேர் பலியாகியதான இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், இந்த சம்பவத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து டெல்லி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
முழுமையான விசாரணை
வெடிப்பைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று பார்வையிட்டார். லோக்நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அவர் நேரில் சந்தித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் இன்று மாலை 7 மணியளவில் i20 கார் வெடித்தது.
இந்த வெடிப்பில் அருகிலுள்ள சில வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த பத்து நிமிடங்களுக்குள் டெல்லி காவல்துறையினர் அங்கு சென்றனர்.
தேசிய புலனாய்வு முகமையினர், தடயவியல் நிபுணர்கள் மற்றும் என்எஸ்ஜி அமைப்பை சேர்ந்தவர்கள் இது தொடர்பாக தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பான அனைத்து சாத்தியக் கூறுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், மேலும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் மனதில் கொண்டு முழுமையான விசாரணை நடத்தப்படும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
திடீரென பலத்த வெடிப்பு
இதேவேளை சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில், சிவப்பு சிக்னலில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த போது திடீரென பலத்த வெடிப்பு ஏற்பட்டது.

ஆறு முதல் ஏழு வாகனங்கள் தீப்பிடித்தன. காயமடைந்தவர்கள் சில வாகனங்களில் இருந்து இறங்கி ஓடினர்.
டெல்லி காவல்துறையினருடன் சேர்ந்து காயமடைந்தவர்களை வாகனங்களில் இருந்து மீட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காட்சிகளைக் கண்டு மனமுடைந்தேன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவத்தில் அப்பாவி உயிர்கள் பல பலியாகியுள்ளது அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது.

சம்பவ இடத்தில் இருந்து வரும் காட்சிகளைக் கண்டு மனமுடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் மனவுறுதியோடு விரைந்து நலம் பெற விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |