வெனிசுலா ஜனாதிபதி மற்றும் மனைவியை சிறைபிடித்தது அமெரிக்க இராணுவம்
புதிய இணைப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட வெனிசுலா மீதான தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவக் காவலில் வைக்கப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி தனது 'ட்ரூத் சோஷியல்' கணக்கில் ஒரு பதிவில் இதை உறுதிப்படுத்தினார்.
இந்த தாக்குதல்களின் இலக்கு வெனிசுலா தலைநகர் கராகஸில் உள்ள பல இராணுவத் தளங்கள் ஆகும்.

முதலாம் இணைப்பு
வெனிசுலா தலைநகரில் வெடிப்புச் சத்தங்கள் :போரை தொடங்கியதா அமெரிக்கா…!
வெனிசுலா தலைநகர் கராகஸுக்கு மேலே வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளதாகவும் புகை எழுவதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைநகர் கராகஸில் இராணுவ நிலைகள் உட்பட பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்த வண்ணமுள்ளன.
நகரின் மையத்தில் உள்ள ஒரு இராணுவ விமானநிலையமான லா கார்லோட்டாவும், ஃபியூர்டே டியுனாவின் முக்கிய இராணுவ தளமும் பாதிக்கப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகளால் விவரிக்கப்பட்டது, இரண்டிலும் வெடிப்புகள் ஏற்பட்டதாகத் தோன்றும் காணொளி பரவியுள்ளது.
பல கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு
சுற்றியுள்ள பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் மீது விமானங்கள் பறப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெனிசுலாவிற்குள் உள்ள இராணுவ நிலைகள் உட்பட இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தனர்.
அவசரநிலை பிரகடனம்
பென்டகன் அனைத்து கருத்து கோரிக்கைகளையும் வெள்ளை மாளிகைக்கு அனுப்பிவிட்டதாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதல்களை அமெரிக்கா தனது நாட்டின் எண்ணெய் மற்றும் கனிமங்களை அபகரிக்க மேற்கொண்ட முயற்சி என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வெனிசுலாவுக்குள் அமெரிக்கா தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் சனிக்கிழமை அதிகாலை ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் பேசிய அந்த அதிகாரி, மேலதிக விவரங்களை வழங்கவில்லை.
images -reuters
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
