காரில் வெடிபொருட்கள் கடத்தியவர் பிடிபட்டார்
மெட்டியகொட காவல்துறை பிரிவுக்குட்பட்ட கலகொட மன்சந்தியில் காரில் வெடிபொருட்களை கொண்டு சென்ற நபர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
காரில் இருந்து 02 ஜெலட்டின் குச்சிகள், 04 மின்சாரமற்ற டெட்டனேட்டர்கள், 04 கிலோ அமோனியா நைட்ரைட் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வெடிபொருட்களை கடத்தியதற்காக மாபலகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மெட்டியகொட காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் ஏதேனும் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இந்த வெடிபொருட்கள் 6400 முதல் 8600 அடி வரை பரவக்கூடியது எனவும், இந்த வெடிபொருட்கள் குறைந்த வெடிமருந்து வகையைச் சேர்ந்தவை எனவும், இது கட்டடங்கள் மற்றும் வாகனங்களை அழிக்கும் திறன் கொண்டது எனவும் விசேட அதிரடிப்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிடைத்தது இரகசிய தகவல்

விசேட அதிரடிப்படை குளிகொட உப முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, பிராந்திய கட்டளைத் தளபதி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் வானுர திஸாநாயக்கவின் மேற்பார்வையில் விசேட அதிரடிப்படை குளிகொட உப முகாமின் பிரதி காவல்மா அதிபர் சி.எம்.சி. பிரியரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.