ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்
இலங்கை மத்திய வங்கி(CBSL) பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவை தளர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் பொருளாதார அபிவிருத்திகளை, குறிப்பாக உள்ளூர் அந்நிய செலாவணி சந்தை நிலவரங்களின் அபிவிருத்திகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஊடாக, ஏற்றுமதியாளர்கள் தமது ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாயாக மாற்றுவதற்கான காலக்கெடுவை கணிசமாக தளர்த்திய இலங்கை மத்திய வங்கி "2024 ஆம் ஆண்டின் இலக்கம் 01 இலங்கைக்கு ஏற்றுமதி வருவாயைக் கொண்டுவருவதற்கான விதிகளை" வெளியிட்டது.
ஏற்றுமதி வருமானம்
மேலும் இந்த விதிகள் 01.07.2024 ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானி எண் 2391/02 இல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி விதிகள் 04.09.2024 அன்று நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு அன்று முதல் நடைமுறைக்கு வந்தன.
இந்த அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்குப் பயன்படுத்திய பின்னர், பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் தங்கள் ஏற்றுமதி வருமானத்தை கட்டாயமாக இலங்கை ரூபாயாக மாற்றுவதற்குப் பொருந்தும் காலம், ஏற்றுமதி வருமானம் கிடைத்த நாளிலிருந்து மூன்று (03) மாதங்கள் முடிந்த பின்னர் பத்தாவது நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி
முந்தைய விதிகளின்படி, ஏற்றுமதி வருமானம் பெறப்பட்ட திகதியைத் தொடர்ந்து மாதத்தின் ஏழாவது நாளில் சம்பந்தப்பட்ட நிலுவைகள் கட்டாயமாக இலங்கை ரூபாயாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்.
இந்த விதிகளை அந்நிய செலாவணி திணைக்களத்தின் இணையத்தளத்தில் (www.dfe.lk) அணுக முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |