அமெரிக்காவில் புதிய சுங்கவரி நடைமுறை: ட்ரம்பின் அதிரடி உத்தரவு
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான உலகளாவிய சுங்கவரி 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய பரஸ்பர சுங்கவரி சட்டவிரோதமானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சுதந்திர தினமாக அறிவித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டொனால்ட் ட்ரம்ப் இந்த உலகளாவிய சுங்கவரியை அறிமுகப்படுத்தினார்.
நடவடிக்கைகள்
இருப்பினும், வரி விதிப்பதில் ஜனாதிபதி தனது அதிகார வரம்பை மீறிச் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அந்த வரிகள் சட்டவிரோதமானவை என அண்மையில் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பு வெளியான மூன்று மணித்தியாலங்களுக்குள்ளேயே நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ட்ரம்ப், உடனடியாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் பின்னர் அதனை 15 சதவீதமாக அதிகரிக்கப் போவதாகவும் அறிவித்தார்.
ஒப்பந்தங்களைச் செய்யத் தவறும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
புதிய வரி விதிப்பு
இருப்பினும், தற்போதைய அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி இன்று முதல் 10 சதவீத சுங்கவரி மாத்திரமே நடைமுறைக்கு வந்துள்ளது.

1974 ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் 122 ஆவது பிரிவைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி 150 நாட்களுக்கு வரி விதிக்கும் ஜனாதிபதிக்கான விசேட அதிகாரத்தைப் பயன்படுத்தியே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாளை அமெரிக்க காங்கிரஸில் ட்ரம்ப் தனது வருடாந்த உரையை ஆற்றவுள்ள நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் புதிய வரி விதிப்பு குறித்து அவர் மேலதிக அறிவிப்புகளை வெளியிடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |